பழைய வாழ்வையே விரும்புகிறேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏக்கம்
‘அமெரிக்க அதிபர் பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்’ என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் பணி மிகவும் எளிமையாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் அந்தப் பணி எவ்வளவு சவாலானது என்பதை இப்போது உணர்கிறேன். கார் ஓட்டுவதை மிகவும் விரும்புவேன். நான் நினைத்தால்கூட இப்போது கார் ஓட்ட முடியாது. எனக்கு பிடித்தவற்றை, தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் இழந்துவிட்டேன். 24 மணி நேர பாதுகாப்பு காரணமாக பட்டுப்புழு கூட்டில் இருப்பதுபோல உணர்கிறேன். இந்த நேரத்தில் எனது பழைய வாழ்க்கையையே விரும்புகிறேன்.
வடகொரியா விவகாரம்
வடகொரியாவுடன் மிகப் பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு ராஜ்ஜிய ரீதியில் தீர்வு காணலாம் என்று முயற்சிக்கிறோம். ஆனால் அது மிகப்பெரும் சவாலாக உள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு தற்போது 27 வயதாகிறது. இளம் வயது என்பதால் அவருக்கு தற்போது நிதானம், பொறுமை, அரசியல் ஞானம் இல்லை. அவருக்கு ஆதரவாக பேசுகின்றேன் என்று நினைக்க வேண்டாம். அவர் புத்திசாலியாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். தென்கொரியாவில் ஏவுகணை தடுப்பு சாதனங்களை நிறுவி யுள்ளோம். அதற்கான செலவை அந்த நாட்டு அரசு அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும்.
சீன அதிபர் நல்லவர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் நல்ல மனிதர். வடகொரியா விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். நான் சீனாவையும் சீன மக்களையும் நேசிக்கிறேன். வடகொரிய விவகாரம் தொடர்பாக அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலை பேசியில் பலமுறை பேசியுள்ளேன். இந்தப் பிரச்சினைக்கு அவர் தீர்வு காண்பார் என்று நம்புகிறேன்.
ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஐ.எஸ். தீவிரவாதிகள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும். அந்த அமைப்பு வேரோடு பிடுங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.