ஐடி வேண்டுகோளின் அடிப்படையிலேயே சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது: உள்துறை அமைச்சகம் விளக்கம்
வருமான வரித்துறையின் வேண்டுகோளின் அடிப்படையில் தான் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டின் முன்பு துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டது என மத்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன ராவின் அண்ணாநகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நேற்று நடந்தது. இதேபோல் அவரது மகன் விவேக் மற்றும் உறவினர்கள் வீடுகள், மற்றும் தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதனிடையே நேற்று மதியம் 12 மணியளவில் துணை ராணுவ படை (சி.ஆர்.பி.எப்) 20 பேர் திடீரென ராமமோகன ராவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டை சுற்றி நின்று கொண்டு துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
தமிழக காவல்துறையுடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு மேற்கொண்டனர். வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடக்கும் போது மாநில காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால் நேற்று சோதனை நடத்தப்பட்ட 14 இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படை போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோதனையின் போது தமிழக போலீசாருடன் துணை ராணுவப் படையுடன் பாதுகாப்பில் ஈடுபட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் தான் சோதனைகள் நடப்பதாக சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், வருமான வரித்துறையின் வேண்டுகோள் அடிப்படையில் ராம மோகனராவ் வீட்டின் முன்பு துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டது. சோதனைக்கு முன்தினம் பாதுகாப்பு கேட்டு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்தது. இதனால் ஒவ்வொரு இடத்திற்கும் 10 முதல் 20 வீரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர் என மத்திய உள்துறை கூறியுள்ளது.