சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன: கடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் சென்னை மாநகரம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் தற்போது வறண்டு போயுள்ளன. இதனால் சென்னை மாநகரம் கடும் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகள் உள்ளன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி. ஏரிகளில் போதுமான நீர் நிரம்பியிருக்கும் நிலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
சென்னைக்கு அதிக மழை தரக்கூடிய அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, கடந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தில், 339 மிமீ மழை (இயல்பை விட 54 சதவீதம் மழை குறைவு) மட்டுமே கிடைத்தது. அதனால் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீரின் அளவு குறைவாகவே இருந்தது.
மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த பிப்ரவரி மாதமே வறண்டது. இதனால் வீராணத்திலிருந்து தினமும் கிடைத்து வந்த 180 மில்லியன் லிட்டர் கிடைக்காமல் குடிநீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம், 3-வது வார நிலவரப்படி, சென்னையில் உள்ள 4 ஏரிகளில் உள்ள நீரின் அளவு 1693 மில்லியன் கனஅடி மட்டுமே இருப்பு இருந்தது.
இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியமானது, கோடை கால நீர் தேவையை சமாளிக்கும் விதமாத, கடந்த பிப்ரவரி மாதமே குடிநீர் விநியோகிக்கும் அளவை 850 மில்லியன் லிட்டரிலிருந்து, 550 மில்லியன் லிட்டராக (35 சதவீதம் குறைப்பு) குறைத்துக்கொண்டது. ஏரிகளில் வழக்கமாக 470 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படும். ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால், அதிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
முக்கிய நீர் ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு குறைந்ததைத் தொடர்ந்து, பற்றாக்குறையை சமாளிக்க புதிய நீராதாரங்களை தேடி சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.
சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, தமிழக அரசு கிருஷ்ணா நதி நீரை நம்பியிருந்த நிலையில், தமிழகம் போலவே ஆந்திர மாநிலத்திலும் வறட்சி நிலவுவதால், கண்டலேறு அணையில் இரு்ந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னைக்கு கிருஷ்ணாநீர் வரத்தும் அடியோடு நின்றுவிட்டது.
இதற்கிடையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் தற்போது வறண்டுவிட்டன. இதனால் ஏரிகளில் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 809 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அதே தேதியில் 5 ஆயிரத்து 640 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இதனால் சென்னை மாநகருக்கான குடிநீர் விநியோகத்தில் மேலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகிப்பதும் குறைக்கப்பட்டு, லாரிகள் மூலமே தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் குடிநீரை, வீணாக சாலையில் கொட்டிச் செல்லும் குடிநீர் லாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய நீராதாரங்கள் வறண்டுவிட்ட நிலையில், நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தற்போது மீஞ்சூர், நெம்மேலியில் இயங்கும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் என 200 மில்லியன் லிட்டர் குடிநீர், பரவனாறு மற்றும் நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதியிலிருந்து 60 மில்லியன் லிட்டர் குடிநீர், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விவசாயக் கிணறுகள் மூலமாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.
சென்னை ஏரிகளில் இருந்து 190 மில்லியன் லிட்டர் நீர் தினமும் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் தேவைப்படும் 550 மில்லியன் லிட்டர் இலக்கை எட்ட முடிகிறது. தற்போது ஏரியில் உள்ள 809 மில்லியன் கன அடி நீர், ஒரு மாத நீர் தேவையை பூர்த்தி செய்யும். இதுமட்டுமல்லாது, கல் குவாரிகள் மற்றும் போரூர் ஏரியில் இருந்து நீர் எடுக்கும் திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இவை, ஏரிகளில் நீர் இருப்பு குறையும் பட்சத்தில் கை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.