தாலிக்கு தங்கம் திட்டம்; 1 லட்சம் விண்ணப்பங்கள் தேக்கம்
: தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில், 1 லட்சம் விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன.
இத்திட்டத்தின்படி பட்டம், டிப்ளமோ முடித்த பெண்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு முடித்தோருக்கு 4 கிராம் தங்கத்துடன் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. 2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது இந்த திட்டத்தில் தங்கத்தின் அளவு 8 கிராமாக உயர்த்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி 2016 மே 23க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 8 கிராம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 12,500 பேருக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் வழங்கவில்லை. புதிய திட்டத்தில் 8 கிராம் தங்கம் கேட்டு இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பதாரர்கள் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தற்போது 4 கிராம் தங்கம் வழங்கி வருகிறோம். விரைவில் புதிய திட்டத்தில் 8 கிராம் வழங்கப்படும் என்றார்.