சொகுசு ரயிலில் உல்லாசம்! ஜப்பானில் உற்சாகம்
‘சொகுசு ரயில்’ என அழைக்கப்படும் ‘ஷிகி ஷிமா’ ரயில் சேவை நேற்று (மே-2 ) தொடங்கப்பட்டது.
ரயில்வே துறையில் உலகளவில் ஜப்பான் எப்போதும் முன்னணியில் விளங்குகிறது. புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் திகழ்கிறது. ஜப்பானில்
மின்னல் வேகத்தில் இயங்கும் புல்லட் ரயில்கள் உலக புகழ் பெற்றவை.
இந்நிலையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சொகுசு ரயில் சேவையை ஜப்பான் நேற்று தொடங்கியது. இந்த ரயில் சுற்றுலா ஆர்வலர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பாரம்பரிய கலை அம்சமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கில் உள்ள தீவு நகரான ஹோக்கைடோ வரை 1,278 கி.மீ., துாரம் செல்கிறது. நான்கு நாள் பயணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் 10 பெட்டிகள் உள்ளன. நீளமான கண்ணாடி ஜன்னல்கள், மரக்கட்டைகளால் செய்யப்பட்ட வரவேற்பறைகள், சொகுசான சோபாக்கள், 5 ஸ்டார் ரெஸ்ட்ரான்ட், டைனிங் ஹால், பெட்ரூம், பொழுது போக்கும் அம்சங்கள் என பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த ரயிலில, மலைகளையும், கடல் வெளிகளையும் ரசித்துக் கொண்டே பயணம் செய்யலாம். பயணிகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என ஜப்பான் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எத்தனை பேர்
ஒருமுறை பயணம் செய்ய, 34 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 2 பெரிய ரூம் உள்பட மொத்தம் 17 ரூம்கள் உள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் பணிப்பெண்கள் பணிபுரிகின்றனர். ‘பியானோ’ இசைக்கருவி இசைக்கும் வசதியும் இதில் உள்ளது.
கட்டணம்
இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு குறைந்தபட்சம் கட்டணம், ஒரு நபருக்கு 1.8 லட்சரூபாய். அதிகபட்சம் 6.4 லட்ச ரூபாய். 2018 மார்ச் வரை ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது.
வேகம்
இந்த ரயில், ஜப்பானின் மற்ற ரயில்களைப் போல வேகமாக செல்லாமல், மணிக்கு 110 கி.மீ., என்ற குறைந்த வேகத்திலேயே செல்லும்.