6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி: ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது டெல்லி
ஐபிஎல் தொடரில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கருண் நாயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் சேம் பில்லிங்ஸ், சபாஷ் நதீம் ஆகியோருக்கு பதிலாக மேத்யூஸ், ஜெயந்த் யாதவ் களமிறக்கப்பட்டனர். ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. பிபுல் சர்மாவுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் 41 பந்துகளில், 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக பேட் செய்த ஹென்ரிக்ஸ் 25 ரன்கள் எடுத்தார். கேப்டன் டேவிட் வார்னர் 30, ஷிகர் தவண் 28, வில்லியம்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஹைதராபாத் அணி பவர் பிளேவில் 66 ரன்கள் விளாசியது. ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 93 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணி மிக வலிமையாக இருந்தது. இதனால் அணியின் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ் ஜோடி முதலில் நிதானமாகவே விளையாடியது.
17 ஓவர்கள் முடிவில் 133 ரன்களே எடுக்கப்பட்டிருந்தது. ரபாடா வீசிய 18-வது ஓவரில் 20 ரன்களும், மோரிஸ் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்களும், கடைசி ஓவரில் (ரபாடா) 19 ரன்களும் விளாசப்பட்டதால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. டெல்லி அணி தரப்பில் முகமது சமி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 186 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி பேட் செய்தது. சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டது. சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் நிதானமாக விளையாட கருண் நாயர் அதிரடி ஆட்டம் மேற்கொண்டார். ஹென்ரிக்ஸ் வீசிய 6-வது ஓவரில் அவர், 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். பவர்பிளேவில் 62 ரன்கள் சேர்க்கப்பட்டது. கருண் நாயர் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் சித்தார்த் கவுல் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினார். ஹென்ரிக்ஸ் வீசிய 10-வது ஓவரில் ரிஷப் பந்த் 3 பவுண்டரிகள் விரட்டினார். 11 ஓவர்களில் டெல்லி அணி 101 ரன்கள் குவித்தது.
முகமது சிராஜ் வீசிய 12-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ரிஷப் பந்த் அடுத்த பந்தில் போல்டானார். அவர் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் வீசிய அடுத்த ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் 2 சிக்ஸர்கள் விளாச இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஸ்ரேயஸ் ஐயர் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. முகமது சிராஜ் வீசிய 17-வது ஓவரில் கோரே ஆண்டர்சன் தலா ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.
புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரிலும் கோரே ஆண்டர்சன் தலா ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் விளாசினார். இதனால் டெல்லி அணியின் வெற்றி எளிதானது. சித்தார்த் கவுல் வீசிய 19-வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது.
ஹென்ரிக்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை கோரே ஆண்டர்சன் பவுண்டரிக்கு விரட்ட டெல்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோரே ஆண்டர்சன் 24 பந்துகளில் 41 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 7 பந்துகளில் 15 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்த டெல்லி அணிக்கு இது 3-வது வெற்றி யாக அமைந்தது. அதேவேளையில் ஹைதராபாத் அணி 4-வது தோல்வியை சந்தித்தது.