அ.தி.மு.க. பிரச்சினையை பயன்படுத்தி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நக்மா பேட்டி
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை பயன்படுத்தி பாரதீய ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நடிகை நக்மா கூறினார்.
வளையல் அனுப்புவோம்
காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் நடிகை நக்மா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் 25 மத்திய ஆயுதப்படை வீரர்கள் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர். காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் பிரச்சினைகளில் மத்திய அரசு மக்களை திசைதிருப்ப முயற்சித்து வருகிறது. மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எந்த பிரச்சினையையும் கையாளும் திறன் இல்லை.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நக்சலைட்டு மற்றும் இந்திய எல்லையில் நடக்கும் தாக்குதல்களை தடுக்க தவறியதால் வளையல் அணிந்துகொள்ளும்படி தற்போதைய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார். எனவே இப்போது பிரதமருக்கு வளையல்களை வழங்குமாறு மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு வளையல்கள் அனுப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
வாக்குச்சீட்டு முறை
விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பாரதீய ஜனதா தலைவர்கள் கோவில்களையும், பசுக்களையும் வைத்து அரசியல் செய்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரு மந்திரி, பெண்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார். பாரதீய ஜனதா தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை.
கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் ஒரு சின்னத்திற்கு வாக்கு அளித்தால் வேறு ஒரு சின்னத்திற்கு விழுந்ததாக தெரியவருகிறது. இதனால் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவருவது தான் சரியானது.
ஆட்சியை பிடிக்க முயற்சி
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்களை தமிழக போலீசார் நடத்திய விதம் கண்டனத்துக்குரியது. டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராடும் பெண்களுக்கு மகிளா காங்கிரசார் துணையாக இருப்பார்கள்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு இல்லாததால் அ.தி.மு.க. அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பயன்படுத்தி கொல்லைப்புற வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர். நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்போது பிறமொழிப் படங்களுக்கு இந்தியில் சப்–டைட்டில் போடவேண்டும் என்பது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.