முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் ரகசிய டைரி சிக்கியது
மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த 500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டு கள் மற்றும் புதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் மூலம் இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த மும்முனை தாக்குதலில் தமிழகம்தான், மிகவும் கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளதைப் போல் ஆட்டம் கண்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் சிலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளோடு கைகோர்த்து செயல்பட்ட பிரபல காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவரது கூட்டாளிகள் சீனிவாச ரெட்டி, பிரேம்குமார் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
கைது
இந்த சோதனையில் ரூ.131 கோடி ரொக்கப்பணமும், 177 கிலோ தங்கமும் சிக்கியது. ரூ.131 கோடி ரொக்கப்பணத்தில் 34 கோடி ரூபாய் மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
முறைகேடாக இந்த பணத்தை சேகர் ரெட்டியும், அவரது கூட்டாளிகளும் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையொட்டி சேகர் ரெட்டி மீதும், சீனிவாச ரெட்டி மீதும், பிரேம்குமார் மீதும் அமலாக்கத்துறையினரும், சி.பி.ஐ. போலீசாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் சேகர் ரெட்டியும், அவரது கூட்டாளிகளும் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் குவாரி குத்தகையில் சேகர் ரெட்டிக்கு வலது, இடது கரங்களாக வலம்வந்து கோடி, கோடியாக பணத்தை அள்ளிய அவரது கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ராம மோகன ராவ் வீட்டில் சோதனை
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த ராம மோகன ராவின் சென்னை அண்ணா நகர் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகியவற்றிலும், அவரது மகன் விவேக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
தமிழகம், ஆந்திரா, கர் நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் மொத்தம் 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. 2 நாட்கள் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கட்டுகட்டாக பணக்குவியலும், கட்டிகட்டியாக தங்கமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.
ஆனால், சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை சார்பில் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கைப்பற்றிய கட்டுக்கட்டான பணத்தை பணம் எண்ணும் எந்திரம் மூலம் வருமான வரித்துறையினர் எண்ணிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தங்க மதிப்பீட்டாளர்கள் மூலம் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள், தங்க, வைர நகைகளை மதிப்பீடு செய்வதாகவும் கூறப்படுகிறது. சொத்து ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி நடப்பதாக சொல்லப்படுகிறது.
ரகசிய டைரி சிக்கியது
ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையின் போது, ‘ரகசிய டைரி’ ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாகவும், அதில் சில அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களை அவர் எழுதி வைத்து இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
டைரியில் பெயர் இருப்பவர்களிடம் ராமமோகன் ராவ் அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி இருப்பதும் தெரியவந்துள்ளது.
எனவே ஊழலில் அவர்களும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எழுந்து உள்ளது. இதையடுத்து ராம மோகன ராவின் டைரியில் பெயர் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகளின் நடமாட்டத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். முழு ஆதாரம் கிடைத்தவுடன் அடுத்தடுத்து அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறை கண்காணிப்பு
கைப்பற்றப்பட்ட ராம மோகன ராவின் ரகசிய டைரி மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர். அந்த ஆவணங் களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆய்வு முடிந்தவுடன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், பணம் மோசடி, கூட்டு சதி, முறைகேடாக தங்கம் பதுக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக், விவேக்கின் நண்பர் வக்கீல் அமலநாதன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொள்வார்கள்.
அவர்களிடம் இன்னும் ஒருசில தினங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துகள் முடக்கம்?
அப்படி விசாரணை நடைபெறும் போது, அதிகாரிகளின் கேள்விகளுக்கு, முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளிடம், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொலைபேசி மூலம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சி.பி.ஐ. நடவடிக்கை
ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு நடவடிக்கை ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் சி.பி.ஐ.யின் நடவடிக்கையும் அவர்கள் மீது விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம மோகன ராவ் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்படலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதனால் அவருடன் கைகோர்த்து செயல்பட்ட முக்கிய அரசியல்புள்ளிகள், அதிகாரிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.