ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தில் ரூ 8 லட்சம் கோடி ஊழல்: அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிரதமரின் இந்த நடவடிக்கை சாமானியமக்களை அதிகம் துன்புறுத்துவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தில் ரூ.8 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-
அதிக மதிப்புடைய பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்த நடவடிக்கை மூலம் கருப்புப் பணமும் ஒழிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநிறுவன முதலாளிகளின் நலனுக்காகவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்களின் வங்கிக் கடன்கள் ரூ.1.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
இப்போது, பெரு நிறுவனங்களின் வங்கிக் கடன்கள் ரூ.8 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டை கடந்த ஒரு மாதமாக கூறி வருகிறேன். ஆனால், என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் உண்மை கூறுவதே இதற்கு காரணமாகும்” என்றார்.
ரூ.8 லட்சம் கோடியில் மெகா ஊழலை செயல்படுத்தவே ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.