கோர்ட்டில் பார்க்கலாம் என சொல்லாதீங்க!: அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை
‛அனைத்தையும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம்; கோர்ட் முடிவு செய்யட்டும் என்ற மனப்பான்மையை அரசு உயரதிகாரிகள் கைவிட வேண்டும்’ என அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
பரிந்துரை:
தேசிய வழக்காடல் கொள்கைக்கான, வரைவு சட்டத்தை இறுதி செய்வதற்காக, சட்டக் கமிஷன் உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம், டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தின்போது, எல்லாவற்றையும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்; கோர்ட் முடிவு செய்யட்டும் என்ற மனப்பான்மையை அரசு உயரதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும், கூடியவரை, வழக்காடல் நிலைக்கு வராமல், நிலைமையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சட்ட கமிஷன் பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.
அரசு தொடர்பான 46 சதவீத வழக்குகள் :
நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள, 3.14 கோடி வழக்குகளில், 46 சதவீதம், மத்திய அரசு தொடர்பானது. எதற்கெடுத்தாலும், வழக்கு தொடர்வதால், இந்த அளவுக்கு, வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்கி, தேவையற்ற பெரும்பாலான வழக்குகளை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.
‘என்னால், பிரச்னையை எதிர்கொள்ள முடியாது’ என, பெரும்பாலான உயர்மட்ட அரசு அதிகாரிகள் கருதுவதால், சம்பந்தப்பட்ட விவகாரம் கோர்ட்டுக்கு செல்கிறது. இதனால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, லட்சக்கணக்கில் குவிந்துள்ளன. பெரும்பாலான விஷயங்களில், மத்திய அரசு துறைகள், உடனுக்குடன் தக்க முடிவுகளை எடுக்க முடிந்தால், ஏராளமான வழக்குகள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.