விளம்பரத்தில் மோடி படம் : அனுமதி கேட்டது யார்?
விளம்பரங்களில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி கேட்டது யார் என்பதை தெரிவிக்க இயலாது’ என, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்தாண்டு பத்திரிகைகளில், பிரதமர் நரேந்திர மோடியின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை குறிப்பிட்டும், 4ஜி சேவையை குறிப்பிட்டும் பெரியளவில் விளம்பரங்களை வெளியிட்டது. அதில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அலுவலகம் அளித்த பதில் விபரம்: விளம்பரங்களில், பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை பயன்படுத்த அனுமதி கேட்டது யார் என்பது குறித்த பதிலை அளிப்பதற்கான ஆவணங்கள், பல வகையாக பரவி கிடக்கின்றன. அவை, குறிப்பிட்ட ஒரே இடத்தில், ஒரே வடிவில் காணப்படவில்லை. எனவே, இந்த கேள்விக்கு பதில் அளிக்க இயலாது. இந்த பதிலை அளிக்க, விரிவான விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம். அது, பிரதமர் அலுவலகத்தின் வழக்கமான செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும்.இவ்வாறு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.