ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘சாம்பியன்’ இலங்கையை வீழ்த்தியது
8 அணிகள் இடையிலான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) தொடர் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வந்தது. இதில் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் நேற்று மோதின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. ஹிமன்ஷூ ரானா (71 ரன்), சுமான் கில் (70 ரன்) அரைசதம் அடித்தனர்.
அடுத்து 274 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 158 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. தொடக்க வீரர் ரிவென் கெல்லி (62 ரன்) ஆட்டம் இழந்ததும் நிலைமை தலைகீழானது. அதன் பிறகு இந்தியாவின் சுழலில் சிக்கிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபிஷேக் ஷர்மா 4 விக்கெட்டுகளும், ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.