உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் 27 தனியார் குடிநீர் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கம், புழல், வடபெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுத்து அதை சுத்திகரித்து பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீராக விற்பனை செய்து வருகின்றன. இதில் பல நிறுவனங்கள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் வந்தது.
இதைதொடர்ந்து, உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்ட 8 குடிநீர் நிறுவனங்களை மூடுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் 28.3.2017 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மூட வேண்டும்
இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாதவரம், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 27 தனியார் குடிநீர் நிறுவனங்கள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவதாக மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘குடிநீர் கிடைக்காமல் பல இடங்களில் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் எந்த அனுமதியும் பெறாமல் தனிநபர்கள் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய எப்படி அனுமதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதன்பின்பு, உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் 27 தனியார் குடிநீர் நிறுவனங்களை மூடுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை வருகிற 12–ந் தேதி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.