ரூ.1.25 கோடி லஞ்சம் வாங்கிய கலால் அதிகாரி கைது
மும்பையில் மத்திய கலால் வரித்துறை துணை கமிஷனராக இருப்பவர் அசோக் நாயக். இவரை அணுகிய ஒருவர், தன்மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் போட்டுள்ள வழக்கை தனக்கு சாதகமாக முடிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட அசோக் நாயக், அதற்காக ரூ.15 கோடி லஞ்சம் கேட்டார். அதற்கு ஒத்துக்கொண்ட அந்த நபரும், இந்த பணத்தை பல தவணைகளாக தருவதாக உறுதியளித்தார். பின்னர் இது தொடர்பாக அவர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் செய்தார். உடனே அசோக் நாயக்கை கையும், களவுமாக பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி முதல் தவணை லஞ்சப்பணமான ரூ.1.25 கோடியை அசோக் நாயக்கிடம் கொடுக்குமாறு அந்த நபரை கேட்டுக்கொண்டனர். அவரும் அந்த பணத்தை அசோக் நாயக்கை அணுகி வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.