49 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது
தேசிய சீனியர் கைப்பந்து
இந்திய கைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ஆகியவை சார்பில் ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 65–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இன்று(சனிக்கிழமை) முதல் 30–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 23 அணிகளும் என்று மொத்தம் 49 அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்–அவுட் முறையில் போட்டி நடைபெறும்.
ஆண்கள் பிரிவில் தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. கேரளா, சர்வீசஸ், ஆந்திரா, ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியன் ரெயில்வே, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. லீக் முடிவில் இந்த இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். எஞ்சிய இரு அணிகள் 2–வது சுற்று லீக் ஆட்டம் முடிவில் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
சிவந்தி கோப்பை
பெண்கள் பிரிவிலும் தமிழக அணி ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியன் ரெயில்வே, மேற்கு வங்காளம், ஆந்திரா, மராட்டியம் ஆகிய அணிகள் இடம் பிடித்து இருக்கின்றன. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த தேசிய போட்டியில் இரண்டு பிரிவிலும் இந்தியன் ரெயில்வே அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ‘ஏ’, ’பி’ பிரிவு ஆட்டங்கள் அனைத்தும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும், சி, டி, இ, எப். பிரிவு லீக் ஆட்டங்கள் ஜேப்பியார் கல்லூரி மைதானத்திலும் நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சிவந்தி கோப்பை, ஜேப்பியார் கோப்பை பரிசாக வழங்கப்படும்.
இந்த தகவலை போட்டி அமைப்பு குழு சேர்மன் ரெஜினா முர்லி, செயலாளர் ஜெ.நடராஜன், இயக்குனர் அபிலாஷ் ரத்னாகரன், கால்ஸ் குரூப் இணை நிர்வாக இயக்குனர் எஸ். நடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.