உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: விகாஸ் கிருஷனுக்கு தடை
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் விளயாட இந்திய வீரர் விகாஸ் கிருஷனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் உஸ்பெகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரரான விகாஸ் கிருஷன் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட அவர் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதிச்சுற்றில் விகாஷ் கிருஷன் விளையாடவில்லை. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. உலக குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டியில் ஆட அவருக்கு தடை விதித்துள்ளது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியில் ஆடாததற்கு விளக்கம் அளிக்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் நேற்று நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார். காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியில் ஆடவில்லை என்று விகாஸ் கிருஷன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் அஜய் சிங் கூறியுள்ளார்.
சிறப்பு பயிற்சி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஆகஸ்ட் மாதம் 25-ம்தேதி தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் ஆட விகாஸ் கிருஷனைத் தவிர ஷிவா தாபா, சுமித் சங்வான், அமித் பங்கல், கவிந்தர் சிங் பிஷ்ட், மனோஜ் குமார், சதீஷ் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக தேசிய அளவில் பயிற்சிமுகாம் நடத்தப்படும் என்றும் உலக அளவில் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.