ஒவ்வொரு நாளும் ரூ.5 கோடி நஷ்டம் : 15ம் தேதி முதல் பஸ் ‘ஸ்டிரைக்!’
‘அமைச்சருடன் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், வரும், 15ம் தேதி, வேலை நிறுத்தம் துவங்கும்’ என, அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி, 2016 ஆகஸ்டில், 12வது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்து, மார்ச், 7 மற்றும் மே, 4 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சு, தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 15-ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில், போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில், நேற்று மீண்டும் பேச்சு நடந்தது.
பின், அமைச்சர் கூறியதாவது: போக்குவரத்து துறையில், பல ஆண்டுகளாக ஏற்பட்ட இழப்பு, தற்போது, 7,000 கோடி ரூபாய் கடனாக மாறி உள்ளது. ஜெ., இருந்த போது, 2,250 கோடி ரூபாய், போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது, தமிழக அரசு, ௩ லட்சம் கோடி ரூபாய் நிதிச்சுமையில் உள்ளது. எனவே, போக்குவரத்து ஊழியர்களுக்கு, முதற்கட்டமாக, 750 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இது, இதுவரை போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்பட்டதை விட, மிகப்பெரிய தொகை. பின், படிப்படியாக நிதி ஒதுக்கப்படும். தற்போது, 2,000 புதிய பஸ்கள் வாங்க, அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. தொழிற்சங்கங்கள், இதை ஏற்று, வேலை நிறுத்தம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த, 4,500 கோடி ரூபாய்; ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகை, 1,700 கோடி; பணியில் உள்ள ஊழியர்களின் நிலுவைத் தொகை, 300 கோடி ரூபாயை, உடனடியாக, அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அமைச்சரிடம் முன்வைத்தோம்.
ஆனால், அவர், 750 கோடி ரூபாய், உடனடியாக ஒதுக்குவதாக கூறினார். ஒவ்வொரு நாளும், ௫ கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த தொகையை வைத்து, எந்த பிரச்னைக்கும் தீர்வு காண இயலாது. அதனால், திட்டமிட்டபடி, 15ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்று முத்தரப்பு பேச்சு : போக்குவரத்து ஊழியர்களின், 13வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, முத்தரப்பு பேச்சு, சென்னையில், இன்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், தொழிலாளர் நலத்துறை கமிஷனர், போக்குவரத்து துறை உயரதிகாரிகள், 10 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.