பாபநாசத்தில் 123 மி.மீ. மழை: குற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீர்
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 123 மி.மீ. மழை பதிவாகியது. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழையால் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று தண்ணீர் கொட்டியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அணைப் பகுதி களில் பெய்த மழையால் அணை களுக்கு நீர்வரத்து காணப்படு கிறது. பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 123 மி.மீ. மழை பெய்ததால் அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து, நேற்று காலையில் 28.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 541.99 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அணையில் இருந்து 199.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் அணையின் நீர்மட்டம் 27.70 அடியாக இருந்தது. அணைக்கு வெறும் 10 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்துகொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 40.90 அடியாக இருந் தது. அணைக்கு 62 கனஅடி தண் ணீர் வந்துகொண்டு இருந்தது. அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
குற்றாலம் மலைப் பகுதி களில் நேற்றுமுன்தினம் மாலையி லும், இரவிலும் பெய்த மழை யால் அருவிகளுக்கு நீர்வரத்து இருந்தது. பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று காலையில் மிதமாக தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் 4 கிளைகளில் தண்ணீர்வரத்து இருந்தது. தற்போது கோடை விடுமுறை என்பதால் அருவி களில் குளிக்க ஓரளவுக்கு கூட்டம் காணப்பட்டது. மலைப் பகுதிகளில் மழை நீடித்தால் அருவி களில் தொடர்ந்து தண்ணீர் விழும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று 2 மணி நேரம் மழை பெய்தது.