பயங்கரவாதிகளுக்கு கடத்த திட்டம் : இந்திய மாத்திரைகள் பறிமுதல்
ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்காக, இந்தியாவில் இருந்து லிபியாவுக்கு கடத்தப்பட இருந்த, வலி நிவாரணி மாத்திரைகளை, இத்தாலி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வட ஆப்ரிக்கா பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் இருந்து இயங்கும், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்காக, இந்தியாவில் இருந்து சென்ற வலி நிவாரண மாத்திரைகள் அடங்கிய மூன்று கன்டெய்னர்களை, இத்தாலி போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, இத்தாலி போலீசார் கூறியதாவது:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா துறைமுகத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த கப்பலில், மூன்று கன்டெய்னர்களில், 3.7 கோடி, ‘டிரமடால்’ என்னும் போதை கலந்த வலி நிவாரண மாத்திரைகள் லிபியாவுக்கு செல்ல இருந்தன; இதன் மதிப்பு, 4,800 கோடி ரூபாய். மாத்திரைகள் இருந்த கன்டெய்னர்களின் மீது, கம்பளி, ஷாம்பூ என எழுதப்பட்டிருந்தது. இந்த மாத்திரைகள், பயங்கரவாதிகளுக்கு வலி நிவாரணியாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.