வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நிதிநிலை அறிக்கை
2016–2017 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளில் தமிழகத்தில் தான் வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2016–2017–ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை சுமார் 70 சதவீதம் அதிகரித்து ரூ.15,850 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
தோல்விக்கு காரணம்
நடப்பாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.41,977 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் இது ரூ.50,000 கோடியை தாண்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தின் பொருளாதார நிலை மீள முடியாத அளவுக்கு அதலபாதாளத்தை நோக்கி செல்வதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தமிழகத்தின் வருவாய் இயல்பான அளவை விட குறைந்து வருகிறது. 2007–2008 முதல் 2012–2013 வரையிலான 5 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சி 2013–2014 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டிருந்தால் 2017–2018–ம் ஆண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டின் வரி வருமானம் ரூ.99,590 கோடி மட்டுமே. ஆக, தமிழகத்தின் வருவாய் இயல்பைவிட ரூ.66,000 கோடி குறைந்துள்ளது. நிதித்துறையில் தமிழகத்தின் தோல்விக்கு இதுதான் உதாரணமாகும்.
செயல் திட்டங்கள்
தங்களின் வருவாயை அதிகரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள் அரசின் வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகத்தை திவாலான மாநிலம் என்று அறிவிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. எனவே கடனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். அதற்கான செயல்திட்டங்கள் குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.