முத்தலாக் முறையை நீக்கினால் முஸ்லிம் திருமணங்களுக்கான மாற்று சட்டம் இயற்ற தயார்
முத்தலாக் முறையை நீக்கினால், முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மாற்று சட்டம் இயற்றத் தயார்’’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கோடை விடுமுறைக்கால அமர்வு முன்பு விசாரிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையின்போது, ‘‘விவாகரத்து நடைமுறைகளில் மிக மோசமானது முத்தலாக். அதை ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனாலும் அனுமதித்து வருகிறோம்’’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் வாதாடுகையில், ‘‘பல்வேறு மதக் குழுக்களும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் முத்தலாக் முறையை வெறுக்கத்தக்கது என கூறினாலும், செல்லத்தக்க உள்ளது’’ என்றார்.
இவ்வழக்கின் 3ம் நாள் விசாரணை நேற்று நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறுகையில், ‘‘சம உரிமை, பாலின சமத்துவம், மனித உரிமைகளுக்கு எதிராக முத்தலாக் நடைமுறை உள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து நடைமுறைகளை மதத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘முத்தலாக் முறையை நீக்கினால், விவாகரத்து கோரும் முஸ்லிம் ஆண்களுக்கு தீர்வு தான் என்ன?’’ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்டர்னி ஜெனரல் ரோத்தகி, ‘‘முத்தலாக் முறையை நீக்கினால் எந்த வெற்றிடமும் ஏற்படாது. முத்தலாக் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிமன்றம் அறிவிக்கும்பட்சத்தில், முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நடைமுறைகளுக்கான மாற்று சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில், முத்தலாக் விவகாரத்துடன் பலதார மணம், நிக்காஹ் ஹலாலா ஆகிய முறைகள் குறித்தும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார். இதற்கு நீதிபதிகள், ‘‘ஒரே நேரத்தில் எல்லா விஷயங்களையும் விசாரிக்க முடியாது. ஆனாலும் மற்ற விவகாரங்கள் நிலுவையில் உள்ளன. அது தொடர்பாக எதிர்காலத்தில் நிச்சயம் விசாரிக்கப்படும்’’ என்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக 6 நாட்களை உச்ச நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது. இன்னும் 3 நாட்கள் விசாரணை மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.