கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா டிரைவர் சாவின் பின்னணியில் அதிமுக புள்ளிகள்
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்ததன் பின்னணியில் அதிமுக முக்கிய புள்ளிகள் இருப்பதாக அவரது அண்ணன் கூறினார். கோத்தகிரி அருகே கோடநாட்டில் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களாவில் காவலாளி கொலை, கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் கனகராஜின், அண்ணன் தனபால்(39), அவரது தம்பி பழனிவேல்(37), உறவினர்கள் ரமேஷ்(32), தங்கவேல்(42) ஆகியோரிடம் கோத்தகிரி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை குறித்து தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மற்றும் கொள்ளைபோன பொருட்கள் குறித்து எனது தம்பி கனகராஜை போலீசார் விசாரிக்க இருந்த நிலையில், என் தம்பி ஆத்தூரில் சாலை விபத்தில் இறந்து விட்டான். அந்த இடத்தில் இதுநாள் வரை எந்த விபத்தும் நடந்ததில்லை.
கடந்த மாதம் 28ம் தேதி உறவினர் ரமேஷின் வீட்டிற்கு செல்லும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. “யாரையோ காப்பாற்றத்தான் இந்த விபத்து நடந்ததுள்ளது.” இது தொடர்பாக ஆத்தூர் மற்றும் கோத்தகிரி போலீசார் என்னிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கூட 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். நான் சேலம் அதிமுக புறநகர் மாவட்ட துணை செயலாளராக இருந்தேன். என்னை கடந்த 15.5.2016ல், தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கி விட்டார். “எனது தம்பி மரணத்தில் அரசியல் பின்னணியும், அதிமுக முக்கிய புள்ளிகளும் உள்ளனர்”. இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன். இவ்வாறு தனபால் கூறினார்.
சயானை கொல்ல முயற்சியா? போலீசில் சிக்கியவர் வாக்குமூலம்
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சயான் (35) கார்விபத்தில் சிக்கி, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெறும் வார்டு அருகே, கடந்த வாரம் இரவு நேரத்தில் நுழைய முயன்ற வாலிபர், மின்சாரம் தாக்கி காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இவர் நேற்று கண் விழித்து பேசினார்.
இவரிடம் ேரஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்தபோது தனது பெயர் பிரதீப்ராஜ் (23) எனவும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் ஒடிசாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டதால் மனம் உடைந்து கோவை வந்து கட்டிட வேலை செய்தவர், வேலை கிடைக்காததால் மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராவை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘‘சயான் என்பவர் யார் என தெரியாது, அவரை கொலை செய்ய வரவில்லை’’ என்றும் கூறியுள்ளார்.