லஞ்சம் வாங்கிய வழக்கில் சீன முன்னாள் மந்திரிக்கு 10½ ஆண்டு ஜெயில்
1997–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை விளையாட்டுத் துறை துணை மந்திரியாக பதவி வகித்தவர் ஜியாவோ டியான். இவர் சீன ஒலிம்பிக் குழுவிலும் உறுப்பினராக இடம் பெற்று இருந்தவர் ஆவார்.
இவர் தனது பதவி காலத்தில், தனது செல்வாக்கை தவறாக பயன்படுத்தி விளையாட்டுத் துறையில் பதவி உயர்வு பெற்றுத் தருதல், கட்டிடங்கள் கட்டுவது, விளையாட்டு போட்டிகளை நடத்துவது ஆகியவற்றுக்காக 1.15 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.8 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவர் மீது ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்யாங் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஜியாவோ லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு கோர்ட்டு 10½
ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தகவல் கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது ஜியாவோ லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாகவும், தனக்கு குறைந்தபட்ச ஜெயில் தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது.
2022–ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற இருக்கும் நிலையில் விளையாட்டுத்துறை முன்னாள் மந்திரி ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.