இந்த ஆண்டிலும் குறைகிறது இன்ஜி., கல்லூரிகளின் எண்ணிக்கை
தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் இன்ஜி., படிப்பிற்கான ஆர்வம் குறைந்து வருவதால் இன்ஜி., கல்லூரிகள் தள்ளாட்டம் கண்டு வருகிறது. இதனால் பல கல்லூரிகள் இழுத்து மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் முதல்கட்டமாக 11 இன்ஜி., கல்லூரிகள் முடப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும் 44 இன்ஜி., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் குறைத்து அண்ணா பல்கலை., நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீப காலமாக இன்ஜி., படிப்பின் மீது மாணவர்களுக்கு படிப்படியாக ஆர்வம் குறைந்து வருகிறது. ஆண்டு தோறும் இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இன்ஜி., கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. இதனால் சில கல்லூரிகள் இழுத்து மூடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சில் புள்ளி விபரங்களின் படி தமிழ்நாட்டில் 2015-16 கல்வியாண்டில் 533 ஆக இந்த இன்ஜி., கல்லூரிகளின் எண்ணிக்கை 2016-2017 கல்வியாண்டில் 527 ஆக குறைந்தது. வரும் கல்வியாண்டில் இது மேலும் குறையும் என கூறப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் 400 இன்ஜி., கல்லூரிகளை மூட அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சிலிற்கு மனுக்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இதில் 11 கல்லூரிகள் அண்ணா பல்கலை.,யின் அனுமதி நீட்டிப்பிற்கே விண்ணப்பிக்காததால் அந்த கல்லூரிகள் மூடுவது உறுதியாகியுள்ளது. அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சிலிற்கு விண்ணப்பித்த கல்லூரிகள் மூடப்பட்டால் தமிழகத்தில் தற்போது இருக்கும் 527 இன்ஜி., கல்லூரிகள் 507 க்கும் குறைவாக மாறும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலை., சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தில் 44 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், முதல்வர், ஆய்வகம், நூலகம், வகுப்பறை ஆகிய 5 காரணிகள் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த 44 கல்லூரிகள் மிக மோசமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்த கல்லூரிகளில் 25 முதல் 50 சதவீதம் வரை இடங்களை குறைத்து அண்ணா பல்கலை., நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஓட்டு மொத்த இன்ஜி., கல்லூரிக்கான இடங்களில் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது