பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ
83 வயதான ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது தொடர்பான மசோதாவுக்கு, ஜப்பான் மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.ஜப்பான் மன்னராக அகிஹிட்டோ (வயது 83) உள்ளார். இவர் அந்த நாட்டின் 125-வது மன்னர்.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.ஒரு கட்டத்தில் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என அவர் குறிப்பிட்டார்.
புதிய சரித்திரம்
ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.அந்த வகையில், தற்போதைய ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி புதிய சரித்திரம் படைக்கிறார்.
மன்னர் பதவி விலகுகிற நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது.