நாட்டை அழித்துவிட்ட ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும் பிரதமர் மோடி உறுதி
நாட்டை அழித்து விட்ட ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும் என பிரதமர் மோடி உறுதிபட கூறினார்.
மின்சார வசதி
விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில், டேராடூனில் பாரதீய ஜனதா கட்சியின் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கியதை 12 சிலிண்டர்களாக உயர்த்தியதை மிக முக்கியமான முடிவாக குறிப்பிட்டனர். ஆனால் எங்கள் அரசு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 5 கோடி பேருக்கு சமையல் கியாஸ் இணைப்புகளை வழங்கி இருக்கிறது.
18–ம் நூற்றாண்டில் வசித்தது போன்று 18 ஆயிரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டார்கள். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்களில் 12 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தந்துள்ளோம். இன்னும் 6 ஆயிரம் கிராமங்களில் மின்சார வசதி தருவதற்கு வேலைகள் நடக்கின்றன. இது ஏழைகளுக்காக செய்துவருகிற பணியா, இல்லையா? ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கும் பணியா, இல்லையா?
ரிப்பன் வெட்ட பதவிக்கு வரவில்லை
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஒழிக்க முடிவெடுத்த பின்னர், பீரோக்களிலும், மெத்தைகளின் அடியிலும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள், இப்போது வங்கிகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
விழாக்களில் பங்கேற்று ரிப்பன் வெட்டுவதற்காக நான் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
கருப்பு பணத்தில் இருந்து நாட்டை விடுவிக்க, நாட்டை அழித்த கருப்பு இதயங்களிடம் இருந்து நாட்டை விடுவிக்க, நான் ஒரு காவலாளியின் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். இது பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
தூய்மை நடவடிக்கை
சிலரது ரத்தத்தில் ஊழல் கலந்து உள்ளது. அவர்கள்தான் மோடி பார்க்க மாட்டார் என்று கருப்பு பணத்தை மாற்றுவதற்கு புறவாசலை நாடுகின்றனர்.
ஆனால் எங்களுக்கு அது தெரியும், அவர்கள் (வருமான வரித்துறை சோதனைகளில்) சிக்கி வருகின்றனர்.
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு என்பது, தூய்மைப்படுத்தும் ஒரு நடவடிக்கை. மக்கள் என்னோடு இதில் சேர்ந்திருப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரூபாய் நோட்டு ஒழிப்பு என்பது மக்களுக்கு அதிகாரம் வழங்கவும், அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கித்தரவும்தான். நேர்மையானவர்களுக்கு அதிகாரம் அளிக்கத்தான் நான் போராடுகிறேன்.
யுத்தம் தொடரும்
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழிக்க எடுத்த முடிவு, கருப்பு பணத்தின்மீது, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்து வந்ததின்மீது, கள்ள நோட்டு கடத்தலின்மீது அழிவை ஏற்படுத்தும் வகையில் விழுந்த பெரிய அடி.
இந்த முடிவில் சிலருக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் இது திருடர்களின் தலைவர் மீது எடுக்கப்பட்ட நேரடி நடவடிக்கை.
ஊழல், நாட்டை அழித்து விட்டது. நாடு முன்னேற வேண்டுமானால், ஊழலை தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஊழலுக்கு எதிரான எனது யுத்தம் தொடரும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.