அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு ஈரான் அமைச்சர் பதிலடி
சவூதி அரேபியாவில் தனது சுற்றுப்பயணத்தைத் துவங்கிய அதிபர் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக சவூதி அரேபியாவையும், இதர இஸ்லாமிய நாடுகளையும் இணைந்து போராடும்படி கேட்டுக்கொண்டார். டிரம்ப் ஈரானை தீவிரவாதத்தை வளர்க்கும் நாடாக தனியாக குறிப்பிட்டு பேசியதே ஈரானிய அமைச்சரின் பதிலடிக்கு காரணமாகியது. ஈரானின் தற்போதைய அதிபர் ரூஹானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. “புதிய தேர்தல்கள் முடிந்துள்ள பூமியில், ஜனநாயகமும், தாராளவாதமும் நிறைந்துள்ள பூமியின் மீது அமெரிக்க அதிபர் கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளார் என்று தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ள ஈரானிய அமைச்சர் ஸாரிஃப் சவூதி அரேபியாவிற்கு உதவி செய்வது அதை ’வளைக்க’ வா இல்லை அது வெளிநாட்டுக் கொள்கையா? என்று கேள்வி எழுப்பினார்.
நீண்ட காலமாகவே சவூதி அரேபியாவும், ஈரானும் தங்களது மதப்பிரிவு சார்பான தீவிரவாதக் குழுக்களுக்கு உதவி வருகின்றன. இத்தகைய உதவிகள் மத்திய கிழக்கு ஆசியாவில் பல மோதல்களுக்கு காரணமாகவுள்ளன. அமெரிக்க அதிபரை அறிமுகப்படுத்தி பேசிய சவூதி அரசர் சல்மான் ஈரானை அமெரிக்காவிற்கும் தங்களுக்குமான பொது எதிரி என்று விவரித்தார். தனது முதல் வெளிநாட்டு பேச்சினை நிகழ்த்திய டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய உலகத்துடனான அமெரிக்காவின் உறவை மறு வரையறை செய்வதாக தெரிவித்தார். அப்போது ஈரானின் செல்வாக்கை கட்டுப்படுத்த உள்ளதாகவும் அறிவித்தார். ”பல பத்தாண்டுகளாக ஈரான் இப்பிரதேசத்தில் மதப்பிரிவினை மோதல்களை ஊக்குவித்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார். இப்பேச்சுக்குத்தான் ஈரானிய அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.