முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு வேலைக்கான ‘குரூப் டி’ தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இத்தேர்வை எழுதுவதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றிருந்தனர். தேர்வை எழுதி முடித்த அவர்கள் பீகார் திரும்புவதற்காக மால்டா மற்றும் என்.ஜே.பி. ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்தனர். மால்டா ரெயில் நிலையத்தில் மட்டுமே சுமார் 40 ஆயிரம் பேர் காத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பீகார் செல்லக்கூடிய அபாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் என்.ஜே.பி. ரெயில் நிலையத்துக்கும், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் மால்டா ரெயில் நிலையத்துக்கும் வந்தன.
இந்த ரெயில்களில், ரெயில் நிலையங்களில் காத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் முன்பதிவு செய்த பெட்டிகளிலும் ஏறினர். அப்போது அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரெயில் நிலையங்களை சூறையாடினர். மேலும் அந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். தண்டவாளங்களில் டயர்களுக்கு தீவைத்து ரெயில் போக்குவரத்தை முடக்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 2 ரெயில் நிலையங்களுக்கும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.
இதேபோல் பல்வேறு இடங்களில் 7 பயணிகள் ரெயில்களை போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் ரெயில்வே போலீசாரால் அவை விடுவிக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்திருப்பதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்ட 25–க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.