மல்லையா நிறுவன பங்குகள் அமலாக்க துறை பறிமுதல்
‘கிங்பிஷர்’ நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, ‘யுனைடெட் பிரீவரிஸ்’ நிறுவன பங்குகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தப்பி ஓட்டம்:
கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தைச் சேர்ந்த, கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றான். அவன் மீது, பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முடக்கம்:
இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் உள்ள மல்லையாவின் சொத்துகள், அமலாக்கத் துறையினரால் முடக்கம் செய்யப்பட்டன. அவற்றை, ஒவ்வொன்றாக பறிமுதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பறிமுதல்:
இந்நிலையில், யுனைடெட் பிரீவரிஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனங்களில், மல்லையாவுக்கு சொந்தமான பங்குகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று பறிமுதல் செய்தனர். மல்லையாவுக்கு சொந்தமான, 9,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 80 சதவீத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீவிர முயற்சி:
ஏற்கனவே, பிரிட்டன் கோர்ட்டில் சரணடைந்து, ஜாமினில் வெளி வந்த மல்லையாவை, இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த, மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.