தனிப்பட்ட வீரரால் ஒரு சில வெற்றியை தான் பெறமுடியும்; ஓட்டுமொத்த அணியால்தான் கோப்பையை வெல்ல முடியும்: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து
ஹைதராபாத்
ஐபிஎல் 10-வது சீசன் இறுதிப் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கிருணல் பாண்டியா 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 24, மிட்செல் ஜான்சன் 13, ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் சேர்த்தனர். புனே அணி தரப்பில் உனத்கட், ஆடம் ஸம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து 130 ரன்கள் இலக்குடன் பேட் செய்த புனே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி ஜோடி களத்தில் நின்ற நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.
ஜான்சன் வீசிய இந்த ஓவரில் மனோஜ் திவாரி (7), ஸ்டீவ் ஸ்மித் (51) ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் புனே அணியால் 2 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்று 3-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த அணி 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்றிருந் தது. மும்பை அணி தரப்பில் ஜான்சன் 3, பும்ரா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக கிருணல் பாண்டியா தேர்வானார்.
வெற்றி குறித்து மும்பை அணி யின் கேப்டன் ரோஹித் சர்மா கூறிய தாவது: தனிப்பட்ட வீரரால் ஒரு சில ஆட்டங்களில் வெற்றியை தேடித்தர முடியும். ஆனால் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டுமானால் ஓட்டுமொத்த அணியின் பங்களிப்பும் தேவை. இந்த விஷயத்தில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்.
நாங்கள் வென்ற 3 பட்டங்களுமே சிறப்பு வாய்ந்தது தான். என்னைப் பொறுத்தவரையில் ஒரு தொடருக்கு ஆரம்ப கட்டத்தில் எப்படி தயாராகுகிறோம் என்பது முக்கியம். அணி சேர்க்கை சரியாக அமைய வேண்டும். இதுவே போட்டிகளை வெல்ல முக்கியமான பகுதியாக நான் கருதுகிறேன்.
வெற்றியை தேடிக் கொடுக்கும் வீரர்களை நாங்கள் அணியில் கொண்டிருந்தோம். மிட்செல் ஜான்சன் இதை ஏற்கெனவே நிரூபித்துள்ளார். மீண்டும் ஒருமுறை அவர் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்து தனது திறனை நிரூபித்துள்ளார். கடைசி ஓவரில் ஸ்மித்துக்கு எதிராக சிறப்பு திட்டங்கள் ஏதும் வகுக்கவில்லை.
அவருக்கு எதிராக வேக மாக பந்து வீசக்கூடாது என நினைத்தோம். இதுதொடர்பாக ஜான்சனுடன் ஆலோசித்தேன். இதன்படி காற்றின் திசைவேகத் துக்கு எதிராக ஜான்சன் பந்து வீசி ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்தார். பேட்டிங்கில் நாங்கள் 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
நெருக்கடியான நிலையிலும் கிருணல் பாண்டியா சிறப்பாக பேட் செய்து 47 ரன்கள் எடுத்தார். இதுபோன்ற ஆடுகளங்களில் 140 முதல் 160 ரன்கள் வரை சேர்த்தாலே வெற்றி பெற போதுமானதுதான். நான் எப்போதுமே 5 பந்து வீச் சாளர்களுடனே களமிறங்க விரும்பு வேன். அதிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கும். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
தோல்வி குறித்து புனே கேப்டன் ஸ்மித் கூறும்போது,‘‘இந்த தொடர் முழுவதும் புனே வீரர்கள் விளை யாடிய விதம் பெருமையாக உள்ளது. குறைந்த ரன்களே இலக் காக இருந்த போதிலும், ஆடுகளத் தில் ரன் சேர்க்க மிக கடினமாக இருந்தது. எல்லோரும் இதை பார்த்திருப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் சிறப்பாக அமைந்திருந்தால் வெற்றி பெற ஏதுவாக இருந்திருக்கும். ஆனால் மும்பை பந்து வீச்சாளர்களை பாராட்ட வேண்டும். எங்களை கட்டுப்படுத்த அவர்கள் பயங்கர மாக செயல்பட்டனர்.
கடந்த இரு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன். எனது அணி உரிமையாளருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தோல்வியடைந்தது ஏமாற்ற மாகவே உள்ளது. நாங்கள் விரும் பியவாறு தொடரை வெற்றியுடன் முடிக்க முடியாமல் போய்விட்டது’’ என்றார்.