துப்பாக்கி முனையில் திருமணம் முடிக்கப்பட்ட இந்தியப்பெண் நாடு திரும்பலாம் பாகிஸ்தான் கோர்ட்டு அனுமதி
டெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் உஸ்மா. இவர், பாகிஸ்தானை சேர்ந்த தாஹிர் அலி என்பவர், துப்பாக்கிமுனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தனது பயண குடியுரிமை ஆவணங்களை அவர் பறித்துக்கொண்டதாகவும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் போய் புகார் செய்தார். அந்த புகாரை தொடர்ந்து அவர் இந்திய தூதரகத்தில் தான் தங்கி உள்ளார்.
அத்துடன் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் உஸ்மா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தை உடல் நலமற்று இருப்பதாகக்கூறி, தான் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இதே போன்று தாஹிர் அலி, தான் உஸ்மாவை சந்திக்க அனுமதி தர வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இவ்விரு மனுக்களும் நீதிபதி மோஷின் அக்தர் கயானி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி மோஷின் அக்தர் கயானி, உஸ்மா நாடு திரும்ப அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோர்ட்டு உத்தரவின்படி, உஸ்மாவின் குடியுரிமை ஆவணங்களை தாஹிர் அலி கோர்ட்டில் ஒப்படைத்தார். அந்த ஆவணங்களை கோர்ட்டு, உஸ்மாவிடம் வழங்கியது. உஸ்மா எப்போது நாடு திரும்புவார் என்பது தெரியவில்லை. அவரை வாகா எல்லையில் பாதுகாப்பாக கொண்டு விட்டு விடுமாறு போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
உஸ்மா நாடு திரும்ப கோர்ட்டு அனுமதி அளித்தது, தாஹிர் அலிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறும்போது, “அவர் நாடு திரும்ப கோர்ட்டு அனுமதித்து விட்டது. இது எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. என் தரப்பு வாதத்தை கோர்ட்டு ஏற்கவில்லை. 2 நிமிடம் அவரை சந்திக்க அனுமதி கேட்டேன். அதுவும் மறுக்கப்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டார்.