அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சுழற்கோப்பையை வென்றது டெல்லி ஏர்போர்ஸ் அணி
கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் டெல்லி ஏர்போர்ஸ் அணி சுழற்கோப்பையை வென்றது.
கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 59-ம் ஆண்டு ஆடவருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.
இதில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் அணியை 84-87 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி ஏர்போர்ஸ் அணி வென்று சுழற்கோப்பையைக் கைப்பற்றியது. 3 மற்றும் 4-ம் இடங்களை முறையே சென்னை ஐஓபி, லோனவ்லா இந்தியன் நேவி ஆகிய அணிகள் பெற்றன.
சிறந்த வீரர்களுக்கு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு பரிசுகளை வழங்கினார். கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சி.பாஸ்கர், கவுரவ செயலாளர் முகமது கமால்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.