கேரளாவில் மாட்டு இறைச்சி சமைத்து இடதுசாரிகள், காங்கிரசார் போராட்டம்
கேரள மாநிலத்திலும் மத்திய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்–மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். இதற்கிடையே மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மாட்டு இறைச்சி திருவிழா
தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச்செயலகம் முன்பு ஆளும் இடதுசாரிகளைச் சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. அப்போது மாட்டு இறைச்சி சமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
போராட்டம் குறித்து ஜனநாயக வாலிபர் சங்க தேசிய தலைவர் முகமது ரியாஸ் கூறுகையில், ‘மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாங்கள் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடத்துகிறோம்’ என்று தெரிவித்தார்.
இதேபோல் கொச்சியில் நடந்த போராட்டத்தில் மாநில சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கலந்து கொண்டு, அனைவருக்கும் மாட்டு இறைச்சியும், பிரட்டும் வழங்கினார்.
காங்கிரஸ்
கொல்லம் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் அரசு அலுவலகம் முன்பு மாட்டு இறைச்சி சமைத்து அனைவருக்கும் வழங்கினர். போராட்டம் குறித்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில், ‘மாட்டு இறைச்சி சமைத்து மோடிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்’ என்று தெரிவித்தார். கொச்சியில் பா.ஜ.க. அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடந்தது.
இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் மாட்டின் தலையுடன் போராட்டம் நடைபெற்றது. மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ்சென்னிதலா கூறுகையில், ‘மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) கருப்பு தினமாக அனுசரிக்கப்பட உள்ளது. கருப்பு உடை அணிந்து போராட்டங்கள் நடைபெறும்’ என்று தெரிவித்தார்.