உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் நர்சிங் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு
சென்னையை சேர்ந்தவர் வராகி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:–
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான நர்சிங் கல்லூரிகள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று உரிய அடிப்படை வசதி இல்லாமல் கேட்டரிங் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில் செயல்படும் பெரும்பாலான நர்சிங் கல்லூரிகள் பாரதீய சேவா சமாஜ், தேசிய தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக விளம்பரப்படுத்துகின்றன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த 2 அமைப்புகளும் மத்திய, மாநில அரசை சேர்ந்தவை அல்ல. தனியார் அமைப்புகள். நர்சிங் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்க இந்த அமைப்புகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
தனியார் அமைப்புகளிடம் அனுமதி பெற்று செயல்படும் இதுபோன்ற நர்சிங் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மட்டுமல்லாமல் இந்த கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் தமிழக அரசிடம் இருந்து பெற்றுக்கொள்கிறது.
இதன்மூலம் அரசின் பணம் சுரண்டப்படுகிறது. எனவே தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அரசின் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் நர்சிங் கல்லூரிகள் குறித்து இந்திய நர்சிங் கவுன்சில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நோட்டீசு
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், டெல்லியில் உள்ள இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் 2 மாதத்துக்குள் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.