ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் இந்த ஆட்சி சிறப்பாக செயல்படும்; ஏற்காடு கோடை விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 6,192 பேருக்கு ரூ.73 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் 700 பவுன் தங்கமும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஏற்காட்டில் உள்ள தேசிய தாவரவியல் பூங்காவில் 3 ஆயிரம் வகையான மரங்களும் 1,800 வகையான செடிகளும் உள்ளன. ஏற்காடு சுற்றுலா தலம் மட்டுமல்ல, ஆலயங்கள் சூழ்ந்த ஒரு ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை கிட்டத்தட்ட 83 ஆண்டுகள் தூர்வாரப்படவில்லை. அணை தூர்வாரப்பட்டால் 10 சதவீதம் தண்ணீர் கூடுதலாக சேமித்து வைக்க முடியும். அதற்காக இந்த அரசு மக்களோடு, விவசாயிகளோடு இணைந்து தூர்வாருகிற திட்டத்தினை மேட்டூர் அணையில் தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலுமே விவசாயிகளுக்குத் தேவையான வண்டல் மண் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த வண்டல் மண்ணால் விவசாயிகளுக்கு கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.
பிரதமருக்கு அழைப்பு
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன். ஆனால், ஒரு சில கட்சித் தலைவர்கள் ஏதோ உள்நோக்கத்தோடு அவரது படத்தை சட்டமன்றத்தில் வைப்பது தவறு என்கிறார்கள். இதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 6 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று சிறந்த முறையில் பணியாற்றியவர் ஜெயலலிதா.
ஆகவே, சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்தால் தான், அந்த மன்றத்திற்கே ஒரு பெருமை கிடைக்கும். மக்கள் மனதிலே யார் குடிகொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் சிறந்த தலைவர், அந்த வகையில் ஜெயலலிதா மக்கள் மனத்திலே நிறைந்திருக்கின்றார். வேண்டுமென்றால் அந்தத் தலைவர்கள், சென்னையிலே இருக்கின்ற ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று சற்றுநேரம் பார்க்கட்டும்.
சிறப்பாக செயல்படும்
தினமும் காலையிலிருந்து மாலை வரை 30 ஆயிரம் பேர், விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் பேர் அந்த நினைவகத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்ற காட்சியை பார்க்கலாம். எனவே, சட்டமன்றத்திலே ஜெயலலிதா படம் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அரசின் சார்பாக தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இறுதியாக, டிசம்பர் மாதம் சென்னையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த விழாவில் பிரதமர் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்திருக்கிறோம். அவரும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில், யார் தடுத்தாலும் இந்த ஆட்சி சிறப்பாக செயல்படும்.
எதிர்க்கட்சிக்கு நன்றி
தூர்வாருவது நான், அதற்கு நிதிஉதவி செய்வது ஜெயலலிதாவின் அரசு. மக்களுக்கு என்ன தேவையோ அதை அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சில தலைவர்களுக்கு அதைக்கூட பொறுக்கமுடியவில்லை. மக்களிடம் செல்வாக்கு கிடைத்துவிடுமோ என்ற எண்ணத்தின் அடிப்படையிலே அவர்களும் தூர்வாருகின்றார்கள். பரவாயில்லை, வரவேற்கத்தக்கது.
எதிர்க்கட்சிகூட இந்த அரசு கொண்டுவந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அதைப்போல குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை விவசாயிகளுக்கு அளித்திருக்கிறோம். அந்தத் திட்டத்திற்கு அவர்களும் வரவேற்பு தந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இந்த அரசு ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றும். மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, மக்களின் நலனுக்காகவே செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.