கரையை கடந்தது ‘மோரா’ புயல் : வங்கதேசத்தில் கடும் பாதிப்பு
வங்கக் கடலில் உருவான, ‘மோரா’ புயல், நேற்று காலை வங்க தேசத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்திற்கு, ‘மோரா’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் சின்னம் காரணமாக, இலங்கையில் கடந்த வாரம் பெய்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 180க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், நேற்று காலை, வங்க தேசத்தின் சிட்டகாங் நகர் அருகே, மோரா புயல் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு, 150 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
இதையடுத்து, அந்நாட்டின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு முதலே, பலத்த காற்று வீசியதால், சிட்டகாங் விமான நிலையம்
தற்காலிகமாக மூடப்
பட்டது. புயல் கரையை கடந்ததும், சில இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், அந்நாட்டின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, 400 தற்காலிக கூடாரங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு
தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. புயல் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணிகள், தொடர்ந்து நடந்து வருகின்றன.