வேலியே பயிரை மேய்ந்தது : சி.பி.ஐ.,யில் கறுப்பு ஆடுகள்
நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின் அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்த நபர்களுக்கு, அந்த அமைப்பின் ஊழியரே போலி அடையாள அட்டைகள் தயாரித்து கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், ஏப்ரல் 22ல், வங்கி மோசடி வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ.,யின் ஒரு பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, பலரை ஏமாற்றிய, அகர்வால், திவாரி என்பவர்கள் சிக்கினர்.
திவாரியிடம் இருந்து, சி.பி.ஐ., அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவனிடம் நடத்திய விசாரணையில், அடையாள அட்டைகள் போலி என்பது தெரிந்தது. அவற்றை, டில்லி, சி.பி.ஐ., அலுவலகத்தில் பணியாற்றும், குல்சாரி லால் என்ற ஊழியர் தயாரித்து கொடுத்ததும் தெரிந்தது. இந்த முறைகேட்டில், குல்சாரி லாலுக்கு, சி.பி.ஐ., அலுவலகத்தில், உணவகம் நடத்தி வரும், யாதவ் என்ற நபருக்கும், பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்களது வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களையும், போலி அடையாள அட்டைகளையும் கைப்பற்றினர்.