தமீம் சதத்தை நிழலுக்குள் தள்ளிய ஜோ ரூட் சதம்: இங்கிலாந்துக்கு வியர்வை சிந்தாத வெற்றி
ஓவல் மைதனத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசப் பந்து வீச்சை புரட்டி எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
306 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து 47.2 ஓவர்களில் 308/2 என்று அபார வெற்றி பெற்றது. மிகவும் தொழில் நேர்த்தியுடன் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ரன்களையும், கேப்டன் மோர்கன் விரைவு ரன் குவிப்பில் 75 ரன்களையும் எடுக்க சமகாலத்திய சிறந்த பேட்ஸ்மெனான ஜோ ரூட் 129 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 133 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் முதலில் பேட் செய்த வங்கதேச அணியின் ‘சயீத் அன்வர்’ தமீம் இக்பால் சதத்தை நிழலுக்குள் தள்ளினார் ரூட்.
பஞ்சு மெத்தை பிட்சில் 400 ரன்கள் கூட போதாது. இதே வகையான பிட்சை இங்கெல்லாம் அமைத்தால் ‘சப்காண்டினண்ட் டஸ்ட் பவுல்’ என்றும் ‘ஃபெதர் பெட்’ என்றும் கேலி பேசுவார்கள்.
ஆனால் மஷ்ரபே மோர்டசாவின் கேப்டன்சியில் நிறைய முதிர்ச்சியின்மை தெரிந்தது. 305 ரன்களை அடித்து விட்டு ஷாகிப் அல் ஹசன் என்ற ‘லாலிபாப்’ (பாய்காட் பாணியில் கூற வேண்டுமெனில்) பவுலரிடமா புதிய பந்தைக் கொடுப்பது? வங்கதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புள்ளி விவரங்கள் படியும் திறமையின் படியும் அற்புதமான பந்து வீச்சாளர் இடது கை முஸ்தபிசுர் ரஹிம். அவரையல்லவா தொடக்கத்தில் கொடுத்திருக்க வேண்டும்? குறைந்தது ஜேசன் ராய் மட்டமான ஸ்கூப் ஷாட் ஆடி ஷார்ட் பைன் லெக்கில் ஆட்டமிழந்த பிறகாவது உடனடியாகக் கொண்டு வந்து ஜோ ரூட்டை நெருக்கியிருக்க வேண்டாமா? ஏன் இந்தக் கேள்விகளெல்லாம் எழுகிறது எனில் ஜோ ரூட் நன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதும் முஸ்தபிசுர் ரஹ்மான் அவரை சில சிக்கல்களுக்குட் படுத்தினார் என்பதே.
ஜேசன் ராய் ஆட்டமிழந்த பிறகு இருந்த வங்கதேச ரசிகர்களின், வீரர்களின் கத்தல்கள், ஆர்பரிப்புகளை அமைதியான முறையில் இங்கிலாந்து எதிர்கொண்டு மிகவும் அனாயசமாக வங்கதேசத்தை ஊதியது என்றே கூற வேண்டும்.
ஜேசன் ராயின் ஃபார்ம் இன்மை தொடர்ந்தது. தேவையில்லாமல் நேராக ஆட வேண்டிய இன்ஸ்விங்கரை ஸ்கூப் செய்து ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். நன்றாக எழும்பி முஸ்தபிசுர் ரஹ்மான் அந்தக் கேட்சை பிடித்தார். ஜோ ரூட் இறங்கி அனாயசமாக ஒரு கவர் டிரைவ் அடித்து வரப்போகும் இன்னிங்ஸிற்கு கட்டியங்கூறினார்.
ஹேல்சும், ரூட்டும் வியர்வை சிந்தாம்ல் வங்கதேச பந்து வீச்சை மைதானம் நெடுக செலுத்தினர், வங்கதேச பவுலர்களும் வியர்வை சிந்தவில்லை. ஒன்று, இரண்டு ரன்களுடன் கட், புல், சில டிரைவ்கள் என்று ஹேல்ஸ், ரூட் வங்கதேச பந்து வீச்சுடன் பொம்மை விளையாட்டு விளையாடினர்.
இருவரும் இணைந்து 159 ரன்களை 2-வது விக்கெட்டுக்காக சேர்த்த போது 86 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து சதத்தை எதிர்நோக்கிய ஹேல்ஸ் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தும் திருப்தியுறாமல் ஒரு பெரிய ஸ்வீப் ஆடி பகுதி நேர பவுலர் சபீர் ரஹ்மானிடம் டீப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் வங்கதேசத்துக்கும் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது, ஆனால் அதை இயான் மோர்கனின் வருகை முடித்து வைத்தது. கடைசி 10 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன்கள் பக்கம் தேவைப்பட்ட நிலையிலும் மோர்கன் (61 பந்துகளில் 75 ரன்கள்) ,ஜோ ரூட் அபாரமாக வெற்றிக்கு சிரமமின்றி இட்டுச் சென்றனர். கடைசியில் 2 பவுண்டரிகளை அடித்து ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். முழுதும் பேட்டிங் திறமையை நம்பியே இங்கிலாந்து அணி வென்று 2 புள்ளிகளைப் பெற்றது.