மணிலா கேளிக்கை விடுதி தாக்குதல் : சூதாட்டத்தில் தோற்றவரால் விபரீதம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சூதாட்ட விடுதியில் ஜூன் 1 ல் நடந்த தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். சூதாட்டத்தில் தோல்வி அடைந்தவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்துள்ளது. மணிலாவில் சூதாட்ட மையத்துடன் கூடிய பெரிய கேளிக்கை விடுதியில் ஜூன் 1 ல் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்து சுட்டார். சூதாட்ட மேஜைகளுக்கு தீ வைத்தார். இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்கும் என மக்கள் அச்சமடைந்தனர்.ரோந்து பணியில் இருந்த போலீசார், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் கேளிக்கை விடுதியை சுற்றிவளைத்தனர். பாதுகாப்புபடையினர் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தனர். கேளிக்கை விடுதி முழுவதும்
புகை மண்டலமாக இருந்தது. பலர் இறந்து கிடந்தனர். அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறக்கவில்லை. மூச்சு திணறலால் இறந்தது தெரியவந்தது. 36 உடல்கள் மீட்கப்பட்டன.
உயிருக்கு போராடி கொண்டிருந்த 54 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விடுதிக்குள் சோதனை நடத்தியபோது, ஒரு அறையில் தீயில் எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்தது. விசாரணையில் அவர் தாக்குதல் நடத்தியவர் என்பதும், போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு தனக்குதானே தீ வைத்து கொண்டதும் தெரிந்தது. கொள்ளையடிக்க
விடுதிக்குள் நுழைந்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில், தாக்குதல்
நடத்தியது ஜெசி கார்லோஸ் ஜேவியர், 42, என தெரிந்துள்ளது.
அவர் அதே சூதாட்ட விடுதியின் நிரந்தர வாடிக்கையாளர். பலமுறை இங்கு சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்துள்ளார். அந்த கோபத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிந்துள்ளது.
சூதாடுவதற்காக கடன் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஜெசி கார்லோஸ் ஜேவியர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.