2018ல் சந்திராயன் 2 ஏவப்படும் : இஸ்ரோ இயக்குநர் தகவல்
சந்திரயான்- -2 விண்கலத்தை, 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குநர்தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்றுமுன்தினம் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த பணிகளில் நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் முக்கிய பங்காற்றியுள்ளது. அங்கு கிரையோஜெனிக் இன்ஜின் தொடர்பாக 199 முறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாக இயக்குநர் டி.வி.வெங்கடகிருஷ்ணன் நேற்று துாத்துக்குடியில் கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி.,மார்க் 3, இன்னும் 3 நாள்களில் ஜிசாட்-19 செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தும்.
சந்திரயான் -2 விண்கலத்தை, 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கிரையோஜெனிக் இன்ஜினில் தற்போது, திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுகிறது. அதற்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பம் தற்போது அமெரிக்கா, ரஷ்யாவில் மட்டுமே உள்ளது. அதனை பின்பற்றும் மூன்றாவது நாடு இந்தியாவாகும். எனவே சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்க்கு, கெரசின் என்பதற்கு பதிலாக ‘இஸ்ரோசின்’ என பெயரிட்டுள்ளோம் என்றார்.