நம்பர் 1 மாணவரின் வினோத ஆசை!!!
பள்ளி மேல்நிலை வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவன், துறவறம் பூண முடிவு செய்துள்ள நிகழ்வு சூரத்தில் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 17 வயது மாணவர் வர்ஷில் ஷா. நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். அதிக மதிப்பெண்கள் பெற்ற எல்லோரும், மருத்துவம், இஞ்ஜினியரிங் என்று மேற்படிப்புகளுக்கு சென்றுகொண்டிருக்க, வர்ஷித்தோ, ஜெயின் மதத்தில் சேர்ந்து விரைவில் துறவறம் பூண திட்டமிட்டுள்ளார்.
சிறுவயதிலேயே ஜெயின் மதத்தை சேர்ந்த ரத்னவிஜய்சூரி மகாராஜின் போதனைகளை கேட்டுவந்த வர்ஷில் ஷா, அவரையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்ட வர்ஷில், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ரத்னவிஜய்சூரி மகாராஜிடம் தீட்சை பெற திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
வர்ஷிலின் தந்தை வருமானவரித்துறை அதிகாரியாக இருந்தபோதிலும், அவரது வீட்டில் டிவி, பிரிட்ஜ் போன்ற எவ்வித சாதனங்களும் இல்லை. தங்களால் சிறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, குறைந்த அளவில் வீட்டில் மின்சார சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சார்ட்டர்ட் அக்கவுண்டட் படித்துவந்த வர்ஷில் ஷாவின் சகோதரியும், தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.