எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு: தினகரன் திட்டம் என்ன?
அ.தி.மு.க.,வில், தனக்குள்ள செல்வாக்கை நிரூபிப்பதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, தினகரன் நடத்தி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணையும்படி, பிரதமர் அறிவுறுத்தினார். அப்போது, முதல்வர் பழனிசாமி தரப்பில், ‘பன்னீர் அணியை இணைத்துக் கொண்டால், கட்சி வலுப்பெறும். ஆனால், பன்னீர்செல்வம் முதல்வராவதை, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை.
எனவே, ஆட்சி தொடர வேண்டும் என்றால், பழனிசாமி முதல்வராக இருப்பதே நல்லது’ என, தெரிவிக்கப்பட்டது. அதை, பிரதமர் தரப்பில் ரசிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக, தாங்கள் கூறியது உண்மை என்பதை நிரூபிப்பதற்காக, தற்போது, இந்த நாடகம் நடத்தப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் வரிசையாக, தினகரனை சந்தித்து வருகின்றனர்.
அதேநேரம், ‘எனக்கு ஏராளமான, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. நான் நினைத்தால், ஆட்சியை கவிழ்க்க முடியும். எனவே, என்னை தொந்தரவு செய்யக் கூடாது’ என, மத்திய அரசுக்கு உணர்த்தவும், இந்த வாய்ப்பை, தினகரன் பயன்படுத்துகிறார்.
அதேபோல், ‘என்னை கட்சியை விட்டு ஒதுக்கினால், கட்சி, ஆட்சி என, இரண்டும் கையை விட்டு போய் விடும்’ என்பதை, சசிகலா குடும்பத்தினருக்கு உணர்த்தவும், எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பை, தினகரன் மேற்கொண்டு வருகிறார்.தினகரனை எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தாலும், ஆட்சி கவிழாது என்பதில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். ஆட்சி கவிழ்வதால், அவர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது.
தற்போது தினகரனை, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பதால், தினகரன் மற்றும் முதல்வர் பழனிசாமிக்கு இடையே மோதல் போன்ற செய்தி, அதிகமாக வெளியில் வருகிறது. இதனால், பன்னீர்செல்வம் குறித்த பேச்சு, குறைந்து வருகிறது.
மேலும், அமைச்சர் பதவி தராததால், ஏராளமான, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தியில் இருந்தனர். அவர்கள் பன்னீர் அணிக்குச் செல்லத் தயாராகி வந்தனர். தற்போது, தினகரன் பக்கம் சென்று விட்டனர். இதன்மூலம், பன்னீர் அணி வலுப்பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
யாருக்கு எவ்வளவு?
அ.தி.மு.க.,வில், 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், 12 பேர் பன்னீர் அணியில் உள்ளனர். தினகரனை, 31 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து உள்ளனர். மீதமுள்ள, 92 பேர், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ளனர்.
பன்னீர் ஆதரவு:
மதுரை விமான நிலையத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, ”பழனிசாமியின் ஆட்சிக்கு, எங்களால் ஆபத்து வராது. நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்,” என்றார்.
இதுவரை 31 பேர்:
இதுவரை, 31 எம்.எல்.ஏ.,க்கள், தினகரனை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.
இச்சந்திப்பு குறித்து, திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ., போஸ் கூறியதாவது: அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. முதல்வர் பழனிசாமியையும் சந்திப்போம்.தினகரனை விலகி இருக்கும்படி கூற, பொதுச் செயலருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. எம்.எல்.ஏ.,க்களிடம், ‘அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். ஆட்சியில் இருந்து, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்’ என, தினகரன் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.