3 ஆண்டுகளில் பல வரிகள் ஜி.எஸ்.டி.,க்காக நீக்கம்
‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்கு வசதி யாக, கடந்த மூன்று பட்ஜெட்களில், பல்வேறுவரிகள் நீக்கப்பட்டு உள்ளன’ என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்காக, நடைமுறையில் இருந்த பல்வேறு வரிகள், கூடுதல் வரிகள், உபரி வரிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளன. கடந்த மூன்று பட்ஜெட்களில், இவ்வாறு பல்வேறு வரி விதிப்புகள் குறைக்கப்பட்டன. இது தவிர, வரி சட்டத்திருத்த சட்டத்தின் மூலம், 13 வகையான வரி விதிப்புகள், சமீபத்தில் நீக்கப்பட்டன.
அதே நேரத்தில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வராத சில பொருட்கள் மற்றும் சுங்கம் தொடர்பான, ஏழு கூடுதல் வரி விதிப்புகள் தொடரும். இறக்குமதி பொருட்களின் மீதான கல்வி வரி, இறக்குமதி பொருட்கள் மீதான உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வரி, கச்சா பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, மோட்டார் ஆயிலுக்கான கூடுதல் வரி, புகையிலைப் பொருட்கள் மற்றும் கச்சா பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரி உட்பட, ஏழு வரிகள், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின்னும் தொடரும்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை, ஜூலை, 1 முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு அமல்படுத்தப்படும் போது, சுங்க வரி, வாட், சேவை வரி, உள்ளூர் வரிகள் உட்பட, 16 வகையான வரிகள் கைவிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.