காலா’ படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா மம்மூட்டி?
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காலா’ படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘கபாலி’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்துக்கு ‘காலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 படங்களை இயக்கும் வாய்ப்பை அவ்வளவு எளிதாக ரஜினி யாருக்கும் கொடுப்பதில்லை. ‘கபாலி’ படம் தந்த திருப்தியும், மன நிறைவும்தான் ‘காலா’ படம் இயக்கும் வாய்ப்பை ரஜினி, ரஞ்சித்துக்கு வழங்கக் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
சினிமா உலகமும் ரஜினி – ரஞ்சித் கூட்டணியை புருவம் உயர்த்தி பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் படு உற்சாகமாக படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ரஞ்சித்.
தனுஷ் தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஹியூமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியோடு மும்பை படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். ரஜினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘காலா’ படத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக முக்கிய கதாபாத்திரத்தில் மம்மூட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவாரேயானால், ‘தளபதி’ படத்துக்குப் பிறகு ரஜினி – மம்மூட்டி இணையும் படமாக ‘காலா’ இருக்கும்.
மும்பையில் நடந்துவரும் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப உள்ள ரஜினி, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மும்பை தாராவி அரங்கில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது.