உணவைப் பற்றிய முதல் படம் ‘சர்வர் சுந்தரம்’- இயக்குநர் ஆனந்த் பால்கி நேர்காணல்
முழுக்க முழுக்க உணவை மையமாக வைத்து ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இயக்கி வருகிறார் ஆனந்த் பால்கி. படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருந்த அவரைச் சந்தித்தோம்.
“சமைக்கும்போது நல்ல மனதோடு சமைக்க வேண்டும், திட்டிக் கொண்டோ, மனது நிம்மதியில்லாமலோ சமைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சமையலில் தெரிந்துவிடும். இந்த விஷயங்களைப் போதனையாக இல்லாமல் கமர்ஷியலாக மக்களுக்குச் சொல்ல நான் சமைத்திருக்கும் படம்தான் ‘சர்வர் சுந்தரம்’” என்றவாறு பேசத் தொடங்கினார் இயக்குநர் ஆனந்த் பால்கி.
உணவைப் பின்னணியாகக் கொண்டு கதை எழுத என்ன காரணம்?
உணவு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான அங்கம். அதைப் பற்றி நமது அன்றாட வாழ்க் கையில் நாம் பெரிதாக யோசிப்ப தில்லை. உணவின் மகத்துவம் பலருக் குத் தெரியவில்லையே என்ற மிகப் பெரிய ஆதங்கம் எனக்கு இருந்தது. ‘சர்வர் சுந்தரம்’ முழுக்க உணவைப் பற்றிய முதல் படமாக இருக்கும். உணவை அடிப்படையாக வைத்து சில படங்கள் வந்திருந்தாலும் அவற்றி லெல்லாம் உணவைப் பின்னணி யாகக் கொண்டு காதலைச் சொல்லி யிருப்பார்கள்.
ஆனால், ‘சர்வர் சுந்தரம்’ முழுக்க உணவைப் பற்றி மட்டுமே. காதல், நட்பு, துரோகம் அனைத்துமே உணவின் பின்புலத்தில் இருக்கும். சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் இப் படத்துக்கு ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். இப்படத்துக்காக சுமார் 15 சமையல் நிபுணர்கள் ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளார்கள்.
உணவை வைத்துப் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக இருக்குமே?
உண்மைதான். உணவை வைத் துப் படப்பிடிப்பு செய்யும் போதெல் லாம் 10 சமையல் நிபுணர்கள் தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு தளத்திலேயே சமைத்து அப்படியே படப்பிடிப்பு செய்வோம். கோவாவில் படப்பிடிப்பு நடக்கும்போது சரியான மழை. அப்போது டெண்ட் போட்டு உள்ளே சமைப்போம். மழை நின்ற வுடன் சமைத்ததை வெளியே எடுத்து வந்து படப்பிடிப்பை நடத்து வோம். இப்படி நிறைய சவால்களைச் சந்தித்துள்ளோம். 15 நிமிடங்களில் உணவுப் பொருட்களின் படப்பிடிப்பை முடிக்காவிட்டால், அதன் நிறம் மற்றும் வழங்கல் முறை உள்ளிட்டவை மாறி விடும். இப்படத்தில் உணவும் ஒரு முக்கியமான நடிகர் எனச் சொல்லலாம்.
‘உணவே மருந்து’ என்ற பாடல் இணையத்தில் வைரலாக பரவி வரு கிறதே. அதன் பின்னணியைச் சொல்லுங்கள்?
இப்பாடலுக்காக சந்தோஷ் நாராய ணுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். நமது உணவு பாரம்பரி யத்தை மக்கள் மறந்துவிட்டார்கள். சிறுவயதில் உருண்டை சாப்பாடு, பழைய சோறு எனப் பல உணவு வகைகள் இருந்தன. அவற்றையெல் லாம் இப்போது மறந்துவிட்டோம். உணவைப் பொறுத்த வரை விஞ் ஞானம் என்ற பெயரில் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.
அந்தக் காலத்தில் உணவுக்கு மரியாதை கொடுத்து, கடவுளை வணங்கிச் சாப்பிடும் முறை இருந் தது. இப்போது அலுவலகம் செல் லும் வழியில் சாப்பிட்டுவிட்டுச் செல் கிறோம். இந்தத் தருணத்தில் ‘உணவே மருந்து’ என்ற ஒரு விஷயத்தைப் பாடலாகச் சொல்ல வேண்டும் என விரும்பினோம். பாடலாசிரியர் விவேக்கிடம் கூறியவுடன் அற்புதமாக எழுதிக் கொடுத்தார்.
வாழை இலை யில் எந்த இடத்தில் பாயசம், கூட்டு, ஊறுகாய் எல்லாம் எங்கிருக்க வேண் டும் என்பது அந்தக் காலத்தில் அறிவியலாக இருந்தது. அதை அப் படியே பாடலாக எழுதிக் கொடுத்தார். ரஞ்சினி – காயத்ரி சகோதரிகள் இது வரை படத்துக்குப் பாடியதே இல்லை. அவர்கள் இப்பாடலைப் பாடி விட்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி எனக் கூறிய போது நெகிழ்ந்துவிட்டேன்.
இந்தக் கதைக்கு எந்த வகையில் சந்தானம் பொருந்தியுள்ளார்?
உணவைப் பற்றி புதிதாக ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். புதி தாகச் சொல்லும் போது அதைச் சொல்வதற்கு ஜனரஞ்சகமான நாயகர் தேவை. அதற்குச் சந்தானம் பொருத்தமாக இருந்தார். காட்சி களுக்கு நடுவே கவுன்ட்டர் கொடுத்து மெருகேற்றிக் கொண்டே இருப்பார். அது இக்கதைக்குத் தேவைப் பட்டது. இரண்டாவது நாயகனுக்கு 4 மாதங்களாக யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடினேன்.
நாகேஷ் குடும்பம் நெருக்கமாக இருந்தாலும், பிஜேஷின் ஞாபகம் வரவே இல்லை. ஒரு நாள் திடீரென்று ஆனந்த் பாபு சாருக்குப் போன் செய்து, பிஜேஷைப் பார்க்க வேண்டும் என்றேன். அவரைப் பார்த்த போது அப்படியே நாகேஷ் சாரைப் போலவே இருந்தார். அவர் இப்படத்துக்குள் வந்தது ஒரு கொடுப் பினைதான். அவருக்கு ஒரு சிறந்த அறிமுகமாக இப்படம் இருக்கும்.
‘சர்வர் சுந்தரம்’ என இப்படத்துக்கு தலைப்பு வைக்கக் காரணம் என்ன?
நாகேஷ் சாருடைய தாக்கம் என்னிடம் நிறைய இருக்கிறது. உணவு சம்பந்தப்பட்ட படம் என்ற போது ‘சர்வர் சுந்தரம்’ அனைவருக்குமே மறக்க முடியாத படம். சந்தானம் சாரிடம் இதைச் சொன்னபோது, முதலில் பயந்தார். பிறகு ஏவி.எம் நிறுவனத்திடம் பேசினோம். எதிர் பார்ப்புக்குரிய தலைப்பு என்பதால் கதையின் மேலோட்டத்தைக் கேட் டார்கள். அதற்குப் பிறகு தான் அனுமதி கொடுத்தார்கள். இந்த தலைப்பு கிடைத்தவுடனே, இப்படத்தின் 50% வெற்றி உறுதியாகிவிட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் நடத்திவிட்டு இயக்குநராகி உள்ளீர்கள். இயக்குநர் பொறுப்பு கடினமாக இருந்ததா?
கடினம் என சொல்லமாட்டேன். இயக்குநர் என்பவர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒருங் கிணைத்து தனக்கு தேவையான வற்றை வாங்கிக் கொள்ள வேண் டும். 10 வருடங்களாக நிகழ்ச்சி ஒருங் கிணைப்பில் இருக்கும்போது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என்பது ஒரு நாள், படப்பிடிப்பு ஒருங்கிணைப்பு என்பது 55 நாள். முதலிலேயே அனைத் தையும் சரியாக திட்டமிட்டுவிட்டதால், படப்பிடிப்பில் கஷ்டப்படவில்லை. முன்னணி நடிகர்கள் பலருமே, இது எனது முதல் படம் மாதிரியே தெரியவில்லை என்றார்கள்.