பிளாஸ்டிக் அரிசியா… எப்படி கண்டுபிடிப்பது? – கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி விளக்கம்
சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக் அரிசி குறித்த தயாரிப்புக் காட்சிகள் பரவி வருகின்றன. இந்தக் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத உணவுப்பொருளான அரிசியில் கலப்படம் என்பதால், கடைகளில் அரிசி வாங்குவதற்கே மக்கள் தயங்குகின்றனர். மேலும் அதே சமூக வலைதளங்களில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
இந்தச் சூழலில் கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லத்தம்பி, நந்தகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கடலூரில் உள்ள நவீன அரிசி ஆலைகள், அரிசி மொத்தம், சில்லரை விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ”கடலூர் மவாட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் சிக்கவில்லை. நாம் பயன்படுத்தும் அரிசி நல்ல அரிசிதானா என்பதை 3 எளிய வழிமுறைகள் மூலம் கண்டறியலாம். தண்ணீர் நிரப்பிய கண்ணாடி டம்ளரில் அரிசியை போட்டால், நல்ல தரமான அரிசி என்றால், அரிசி மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் தங்கும். அதுவே பிளாஸ்டிக் என்றால் மிதக்கும்
அடுத்து சூடான எண்ணையில் நல்ல அரிசியைப் போட்டால், அது போட்டவுடன் பாத்திரத்தின் அடியில் தங்கும். பிளாஸ்டிக் என்றால் அது பிஸின் போன்று உருகவோ அல்லது கூழ் போலவோ மாறும்.
அடுத்து நல்ல அரிசியை எரித்தால் அது பொரிந்து கருகும் தன்மையாக இருக்கும். பிளாஸ்டிக் என்றால் அது எரிவதோடு, அதிலிருந்து ஒருவித நாற்றமும் வீசும். இந்த எளிய வழிகளைக் கையாண்டு போலியானவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.
மேலும் பொதுமக்கள் உணவுப்பொருட்கள் தரம் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக புகார் அளிக்கும்பட்சத்தில், அந்தப் புகார் சென்னையில் பெறப்பட்டு உரிய அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.