ஒன்றாக இணைய ஓபிஎஸ் தயக்கம் காட்டுவது ஏன்? – ‘புலி’ கதை கூறி புதுக்கோட்டையில் முதல்வர் கேள்வி
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியில் இணையத் தயக்கம் காட்டுவது ஏன் என்று புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி திறப்புவிழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஒரு கதையைக் கூறி கேள்வி எழுப்பினார்.
விழாவில் அவர் கூறிய கதை வருமாறு:
ஒரு காட்டில் ஓநாயும், நரியும் நண்பர்களாக இருந்தன. அவற்றுக்கு இரை கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. மனவிரக்தியில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு புலியோடு ஓநாயும், நரியும் கூட்டு வைத்துக்கொள்ள தீர்மானித்து பேச்சுவார்த்தை நடத்தின. மூன்றும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த இரை கிடைத்தாலும் அதை பங்குபோட்டு சாப்பிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொண்டன.
நமக்கு ஒரு வலிமையான தலைவன் கிடைத்துவிட்டான் என்று ஓநாயும், நரியும் ஊளையிட்டு, ஊளையிட்டு தங்களது மகிழ்ச்சியை காடு முழுவதும் தெரிவித்துவந்தன. ஒரு நாள் புலிக்கு ஓநாய், நரி மீது சந்தேகம் வந்தது.
ஒரு மானை வேட்டையாடினால் அதை எப்படி பங்குபோட்டுக் கொள்வது? என புலி கேட்டது. அதற்கு ஓநாய், புலியே புலியே நீதான் எங்கள் தலைவன், அதனால் மானின் தலை உனக்கு. இந்த நரி, வேகமாக ஓடக்கூடியது. அதனால் மானின் 4 கால்களும் இந்த நரிக்கு கொடுக்கலாம். மீதி இருப்பது உடம்புதான். அதை நான் எடுத்துக்கொள்வேன் என்றது.
ஓநாயின் சூழ்ச்சியைத் தெரிந்துகொண்ட புலி, அதன் தலையில் ஓங்கி அடித்தது. வலி தாங்காமல் ஓநாய் ஊளையிட்டது. பின்னர் நரியே, நீ எப்படி பங்குபோடுவாய் என்று நரியிடம் புலி கேட்டது. இந்தக் காட்டுக்கே தலைவரான சிங்கத்தை நாட்டாண்மையாக வைத்து நாம் பிரித்துக் கொள்ளலாம் என்றது நரி.
3 விலங்குகளும் சிங்கத்தை அணுகின. அவை சொல்வதை சிங்கம் கேட்டுவிட்டு, வேட்டையில் கிடைக்கும் பொருளில் நாட்டாண்மைக்கும் ஒரு பாகம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன், நீங்கள் வேட்டையாடிய மானை இங்கே கொண்டு வந்து போடுங்கள். நான் பிரித்துத் தருகிறேன் என்றது. அதற்கு மற்ற மூன்றும், ஒன்றையொன்று பார்த்து திருதிருவென விழித்தபடி, “இனிமேல்தான் வேட்டையாட வேண்டும்” என்று கூறியனவாம்.
கிடைக்காத ஒன்றுக்காக இத்தனை போராட்டமா? ஆரவாரமா?. புலியே, இந்த விலங்குகளின் நயவஞ்சகப் பேச்சைக் கேட்டு நீ உன் இனத்தை விட்டு பிரிந்துவந்தது தவறு. உடனே உன் இனத்தோடு சேர்ந்து விடு என்றதாம். நாட்டாண்மையே தீர்ப்பு சொன்ன பிறகு புலி பதுங்குவதும், தயங்குவதும் ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.