Breaking News
முறையற்ற ‘தலாக்’ விவாகரத்து: உ.பி.,யில் ரூ.2 லட்சம் அபராதம்

உ.பி.,யில், மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்த கணவனுக்கு, ஊர் பஞ்சாயத்து, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இஸ்லாமிய சமூகத்தில், மனைவியை, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பழக்கத்தில் உள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது; தலாக் குறித்த விவாதங்களும் நடந்து வருகின்றன.

தலாக்:

இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள, உ.பி., மாநிலம், சம்பல் பகுதியில், 45 வயது ஆண் ஒருவர், 22 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்து, 10 நாட்களில் இருவருக்குள் சண்டை நடந்துள்ளது; இதையடுத்து, மூன்று முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்து, வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதை எதிர்த்து, அந்த பெண்ணின் உறவினர்கள், ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டனர். அங்குள்ள மதரசாவில், ஊர் பஞ்சாயத்து கூடியது; 52 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அபராதம்:

‘அந்த நபர், விசாரணை ஏதுமின்றி, உடனடியாக விவாகரத்து செய்ததை ஏற்க முடியாது’ என, பஞ்சாயத்து அறிவித்தது; அவருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அந்த பெண் வரதட்சணையாக கொண்டு வந்த பொருட்களை திருப்பிக் கொடுக்கவும் உத்தர விடப்பட்டது. அந்த பெண்ணிற்கு, 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், தீர்ப்பளித்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.