இறைச்சிக்காக மாடு விற்க தடை : கருத்துக்களை தெரிவிக்கலாம்
”இறைச்சிக்காக மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கான தடை உத்தரவு, மக்களின் உணவு பழக்கத்தை மாற்றுவதற்காகவோ, வியாபாரத்தை குலைப்பதற்காகவோ கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பாக, மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்,” என, மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு, தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த பிரச்னை குறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ வர்தன் கூறியதாவது: மாடு உள்ளிட்ட கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, வரைவு சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது, மக்கள் கூறிய கருத்தின் அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இது, தனி மனிதனின் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவோ, வியாபாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவோ கொண்டு வரப்படவில்லை. யாரையும் துன்புறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த, நான்கு வாரங்கள் தடை விதித்து, சென்னை ஐகோர்ட், மே, 30ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இந்தப் பிரச்னை மீண்டும் கோர்ட்டுக்கு சென்றுள்ளதால், இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
அதே நேரத்தில், மத்திய அரசின் உத்தரவு குறித்து, மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அது குறித்து ஆலோசித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.