மல்லையாவுக்கு டிச.,4 வரை ஜாமின்
நாடு கடத்த வேண்டும் என, மத்திய அரசின் சார்பில், பிரிட்டன் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, டிச., 4 வரை, ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது.
பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, 2016 மார்ச்சில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார் மல்லையா. ‘இந்த வழக்குகளில் ஆஜர்படுத்தும் வகையில், மல்லையாவை நாடு கடத்த வேண்டும்’ என, பிரிட்டன் அரசுக்கு, மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்ட மல்லையா, உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மல்லையா, கோர்ட்டில் நேற்று நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பின், மல்லையாவின் ஜாமின், டிச., 4 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வழக்கின் விசாரணை, ஜூலை, 6க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது